Thursday, May 3, 2007

நிங்காத நினைவுகள்

கண்ணின்றி பார்வையுண்டோ ?
காவலின்றி செல்வமுண்டோ ?
காற்றின்றி ஜீவனுண்டோ ?
காதலின்றி வாழ்வுண்டோ ?

கல்நெஞ்சர் கள்வர் கூட
காதலிலே கரைந்திடுவர்,
கணக்கில்லா காவியங்கள்
காதலுக்கு தீட்டிடுவர்.

காதலில்லா வாழ்க்கையெல்லாம்
காகிதப்பூ மனமென்று
காதலித்த கதையெனதை
கனிவாய் நீர் கேட்டிடுவீர்

கல்லூரி நாட்களில்தான்
கண்டேன் அக்காரிகையை,
காற்றில் வந்த மோகினி போல்,
கால் முளைத்த தேவதை போல்,
காட்சி தந்து சென்று வந்தாள்.

சிங்கத்தின் குகைக்குள்ளே,
சிறுக்கியவள் புகுந்தாலும்
சீறியெழ மறந்திடுமே,
சின்னதொரு புன்னகையில்

முக்காலம் அறிந்திருந்த
மெய்ஞான முனிவர்கூட,
தற்காலம் மறந்திடுவார்
கன்னியவள் கடைவீச்சீல்.

எனில் இக்கால வாலிபன் நான்,
என் செய்வேன் ?

உள்ளத்தில் அவள் நினைவாய்,
உறக்கத்தில் அவள் கனவாய்,
உதிரத்தில் அவள் துடிப்பாய்,
வட்டமிட்டு வட்டமிட்டு,
வனக்குரங்காய் நான் திரிந்தேன்.

மெல்ல மெல்ல அவள் மனது,
கட்டிழக்க துவங்கியது.
உலகம் எமை காதலர்கள் எனும் பெயரில்,
கட்டிவைத்து பூட்டியது.

இருட்டின் போர்வையில்
எங்கள் சந்திப்பு,
வெளிச்சத்து வாழ்வுக்கு ஒத்திகை

கண்ணே, மணியே, கரும்பே,
எனகாதல் மடல் கொடுத்து வாங்கி,
காத்திருந்தோம் மணவறைக்கு.

நீர்சூழ்ந்த வையகத்தில்
நிலையுண்டோ நிம்மதிக்கு ?
சத்தியமாய் இல்லையில்லை
சான்றதற்கு என் வாழ்க்கை.

விதி யென்னும் சதிகாரன்
குறியினிலே அகப்பட்டு,
விபத்தென்னும் பெயரினிலே
விடைபெற்றால் என்னவளும்.

செல்லா காசாய்,
செல்லரித்த ஓவியமாய்
உலகத்தின் பார்வைக்கு,
விந்தையாய்,விநோதமாய் நான்.

ஆழ்கடலில் அடித்து வைத்த
ஆணிவேறாய், அவள் நினைவுகள்

என்றும் நிலைத்திருக்கும்.
கடைசி மூச்சோடு கூடிய,
கட்டாய மரணம் வரை.

கனவுலகில் பறக்கையிலே,
சிறகிழந்த பறவைகள்தான்,
நீங்காத நினைவுகளாய்,
நிலைமாறிப் போயினவோ ?

1 comment:

empty mind.... said...

" Kannavu,
Neengaatha Nivavugal...
Nijam aagathathaal..
Naam Thedikollum ..

Thatkhazhilaga Niranthiram..."