நீ என்றோ புன்னகை பூக்கையில்,
பிடித்து வைத்ததை,
இன்னும் கூட உதிர்க்கவில்லை உள்ளம்.
கல்லூரி வாசலில் நீகால் சறுக்கி,
நான் கை பிடிக்க,
உன் முகம் பூசிய சிவப்பு
இன்னும் அழியவில்லை என்னுள்.
நீ என்னோடு பேசிய,
ஒரு சில வரிகளும்
இதையத்தின் ஆழங்களில்,
அலைகளாய், அமைதியாய்,
எதிரொலித்துக் கொள்கிறது.
நீ வாங்கிப்போன இசைத்தட்டு,
படித்துக் கொடுத்த புத்தகம்,
எழுதித்தந்த பேனா,
என அத்தனையும் பொக்கிஷமாய்
என் வீட்டில்.
ஒரு காலக்கட்டத்தின்
நிகழ்காலம்தான்
அத்தனையும்.
இன்றோ வெறும் நினைவில்
உறங்கும் பழமைகள்.
என் ஒப்புதல் இல்லாமலேயே,
குழந்தை போல்,
முகமெல்லாம் கோடு கிறுக்கி,
முடிகளுக்கு வெள்ளை அடித்து,
சிரிக்கிறது காலம்.
எனக்கு மட்டுமா மாற்றங்கள்,
கால வெள்ளத்தில் நீ மட்டும்
எப்படி கரையாமல் இருக்கிறாய் ?
அதே முகம், அதே புன்னகை,
அதே குரல்,
அப்படியே இருக்கிறாய்
மனசில்.
Thursday, May 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment